ராகு கேது

 

ஜோதிட சாஸ்திரம் இந்த பூலோகத்திற்கு வந்து வருடங்கள் ஆகி விட்ட போதிலும் ராகு கேதுக்கள் குறித்த பல்வேறு மர்மங்களுக்கு முழுமையான மற்றும் தீர்க்கமான முடிவிற்கு வர முடியவில்லை. ஆயினும் ஓரளவு அவர்களின் செயல்பாட்டை நாம் புரிந்து கொள்ள முடியும்.

ராகு கேது இரண்டுமே நிழல் கிரகங்கள்.
*யாருடைய நிழல்? சந்திரனின் நிழல்.

*எப்பொழுது நம் கண்களுக்கு புலப்படுவார்கள்? கிரகண காலத்தில் மட்டும்.

*ஜோதிடத்தில் எந்த நிலையில் சஞ்சரிப்பார்கள்?வக்ர நிலையில்…

*யாரை குறிக்கிறார்கள்? தந்தை வழி முன்னோர்கள் மற்றும் தாய் வழி முன்னோர்கள்.

ஜோதிடம் தெரிந்த பலருக்கும் இது தெரிந்தே இருக்கும்.அதையும் தாண்டி ராகு கேது குறித்து நாம் அனைவரும் தெரிந்து கொள்ள சில விஷயங்கள் இருக்கின்றன.பார்க்கலாம்.

ராகு கேது இரண்டுமே நம் பூர்வ ஜென்ம கர்மாவை சொல்லும் கிரகங்களாகும். அதில் ராகுவை எடுத்து கொண்டோம் என்றால் உங்கள் முந்தைய பிறவியின் நிறைவேறாத ஆசையை கூறுவார்.உதாரணமாக ராகு ஐந்தில் நின்றால் உங்களுக்கு குழந்தைகள் மீதே அளவற்ற ஆர்வம் ஏற்படும்.ஆனால் அதை எளிதில் நிறைவேற்ற விட மாட்டார்.பல்வேறு படிநிலைகளுக்கு பின்பே வழி விடுவார்.ஏன் என்று பார்த்தோமேயானால் அது நம் நிறைவேறாத ஆசையாகும்.சனி தாமதப்படுத்தி ஒரு விஷயத்தை கொடுப்பார்.ஆனால் அந்த விஷயத்தில் பேராசையை உண்டு பண்ணுவார் ராகு.பேராசை என்பது மனிதனை தவறான பாதைக்கு இட்டு செல்லும். அதனால்தான் ராகு பாபராக கருதப்படுகிறார்.ஆயினும் கலியுகம் என்பது ராகுவின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது.இதேபோல் ராகு நின்ற வீடுகளுக்கு ஏற்ப நம் கர்மாவானது தீர்மானிக்கப்படுகிறது.

ராகுவானது எந்த கிரகத்தோடு சேர்கிறது எந்த கிரகத்தால் பார்க்கப்படுகிறது , எந்த கிரகத்தின் வீட்டில் அமர்ந்து உள்ளது அது எத்தனையாவது பாவகம்,வீடு கொடுத்தவர் நிலை சாரம் கொடுத்தவர் நிலை,அம்சத்தில் ராகு வின் நிலை என அனைத்தும் பார்த்தால் மட்டுமே அவர் என்ன செய்வார் என்பதை ஓரளவிற்கு சொல்ல முடியும்.இது கேதுவிற்கும் பொருந்தும்.

கொட்டி கொடுப்பதிலும் சரி குழி தோண்டி விழ வைப்பதிலும் சரி ராகுவிற்கு நிகர் ராகு மட்டுமே.ஜோதிடத்தில் சூரியனை விஞ்சிய பலம் பொருந்தியவர் ராகு.தாமஸ குணம் கொண்ட அசுர கிரகம்.எதிலும் திருப்தி படும் மன நிலையை தர மறுப்பவர். சந்திரன், சூரியன்,சனி,செவ்வாய் ஆகிய நான்கு கிரகங்களோடும் பாபத்துவ அமைப்பில் சேராமல் இருப்பது நல்லது. ஏனென்றால் அது பல சிக்கல்களுக்கு வழி வகுக்கும்.மாற்று சிந்தனை, குறுக்கு புத்தி,பிரம்மாண்டம் என பல விஷயங்களுக்கு அவரே காரகர்.

உப செய ஸ்தானங்களான 3,6,11ல் நன்மைகள் தருவார்.அதுவும் விதிகளுக்கு உட்பட்டு.தனுசு ,மீனம்,விருச்சிகம்,சிம்மம் ஆகிய வீடுகளில் அவர் எரிச்சல் அடைவார்.ரிஷபம்,கன்னி,மிதுனம்,கும்பம் ராசிகளில் அவர் சுயமாக செயல்பட முடியும். மூல நூல்களில் மேஷம்,இடபம்,கன்னி,கடகம்,மகரம் அவருக்கு ஏற்ற இடம் என்று சொல்லப்படுகிறது.ஆயினும் சில சமயங்களில் அதுவும் முழுமையாக ஒத்து வருவதில்லை.

ராகுவிற்கு என்று தினமும் ஒன்றரை மணி நேரம் காலமாக வழங்கப்பட்டுள்ளது.அந்த நேரத்தில் நல்ல விஷயங்கள் செய்ய படுவது இல்லை. ஆயினும் இறை வழிபாடு செய்யலாம். பூரண இருள் கிரகம் என்பதால் நற்காரியங்களை அந்த நேரத்தில் செய்வதை தவிர்க்கிறோம்.

ஜாதகத்தில் சுபராக செயல் படும் ராகு வாழ்க்கை வாழ்வதற்கே என்று வாழ வைப்பார்.

பாபராக செயல் பட விதிக்கப்பட்ட ராகு அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை உணர்த்தி விட்டு செல்வார்.

கேது குறித்த பதிவு அடுத்த கட்டுரையில் தொடரும்.
……நன்றி…….

Related posts

Leave a Comment